ஞானபிரகாசம் என்ற இயற்பெயரை கொண்ட சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம்
 (Ma.Po.Sivagnanam, 26 சூன் 1906 – 3 அக்டோபர் 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர்.சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

வாழ்க்கைக் குறிப்பு
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். ஆயினும் சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது

Source: Wikipedia 
வினாக்கள்:
ம.பொ.சிவஞானத்தின் இயற்பெயர் என்ன?
விடை:ஞானபிரகாசம்